மிட்டாய் கவிதைகள்!

காதல் காய்ச்சல்

July 20, 2013

kaadhal kaaichal

காதலுக்குக் கண்ணில்லை
எனச் சொல்லி தெரியாமல்
அவள் கொடுத்த
உப்பிட்ட தேநீர் கூட
இனித்தது என் நாவில்!

அவள் மூச்சுக் காற்று
என் முகமருகே
வரும் நேரம்
அனல் காற்றும் குளிராகி
என்னை நடுங்கச் செய்யும்!

ஆயிரம் உணவுகள்
என் முன்னே காத்திருந்தும்
பசியை மறந்து விட்டேன்
அவள் உதட்டில் ஒட்டியிருந்த
ஒற்றைச் சோற்றைப்
பார்த்த பின்னர்!

தேர்வறையில் அவள்
கண்சிமிட்டலைக் கண்டபின்பு
தேர்வெங்கே எழுதுவது?
கிறுக்கிக் கொண்டிருந்தேன்
தமிழ் மொழியில் அவள் பெயரை
சிறு குழப்பத்தில்!

அவள் என்னை
விட்டுச் சென்ற பின்னும்
இவையெல்லாம் எனைத் தொடர
நண்பன் சொன்னான்
இவைகள் அனைத்தும்
காதல் மட்டுமல்ல
காய்ச்சலின் அறிகுறிகளும் கூட என்று!


எழுத்தாளர்: எம்.ஆர்.கார்த்திக்